ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம்

Report Print Rakesh in போக்குவரத்து

ரயில்வே திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை 9 ஆவது நாளாகத் தொடர்ந்தது. இந்தநிலையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால். ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால் உடனடியாகக் கடமைக்கு உடன் சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவர்கள் தாமாகவே தத்தமது பதவிகளிலிருந்து விலகிக்கொண்டவர்களாகக் கணிக்கப்படுவார்கள் என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு வரும் பட்சத்தில் தாம் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த போதிலும் இன்று 23 அலுவலக ரயில் சேவைகள் நடைபெற்றன எனவும், வழமையாக 40 அலுவலக ரயில் சேவைகளே நடைபெற்று வந்தன எனவும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ரயில்வே திணைக்களம் வருடாந்தம் 700 கோடி ரூபா நட்டத்திலேயே இயங்கி வருகின்றது. பிரயாணிகளுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கையின்படி இந்தியா , சீனா ஆகிய நாடுகளிடமிருந்து 20 இற்கும் மேற்பட்ட ரயில் எஞ்சின்களையும் பெட்டிகளையும் கொள்வனவு செய்துள்ளோம்.

பொலனறுவை, பெலியத்த , கண்டி ஆகிய இடங்களுக்குப் புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளோம். புதிய ரயில் பாதைகளையும் நிர்மாணித்து வருகின்றோம்.

ஒரு ரயில் சாரதியோ வேறு தர அதிகாரியொருவரோ ஒரு மணித்தியாலம் மேலதிக நேரம் வேலை செய்தால் அதனை ஒன்றரை மணித்தியாலம் எனக் கணித்தே மேலதிக நேரக் கொடுப்பணவு வழங்கப்படுகின்றது.

ஒரு நாளைக்கு ஒரு சாரதியோ அதிகாரியோ 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரையிலான மேலதிக கொடுப்பணவுகளைப் பெறுகின்றனர். இந்தநிலையில் இந்த ஊழியர்கள் ரயில் பயணிகளுக்குப் பெரும் அநீதியையே இழைத்து வருகின்றனர்.

பல சுற்றுப் பேச்சு நடத்தியும் இவர்கள் எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வருகிறார்கள் இல்லை. இந்த வேலைநிறுத்தத்தின் பின்னனியில் சதிமுயற்சி ஒன்றே நடைபெற்று வருகின்றது" - என்றார்.

இதேவேளை, தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற்று வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் பெரும் பிரயாணச் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

காங்கேசன்துறை, மட்டக்களப்பு, பதுளை ஆகிய பகுதிகளுக்கான இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதால் தபால் சேவைகளும் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட தூரம் குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், பதுளை ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை நடைபெறாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.