நிந்தவூர் விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Varunan in போக்குவரத்து

நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணமடைந்தவர் தலைக்கவசம் அணியாமை வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட விபத்து குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் பொலிஸார் மேற்கண்டவாறு கூறினர்.

சம்பவ இடத்தில் பலியான 4 பிள்ளைகளின் தந்தையான அலியார் காசீம் முகமது இர்சாட்(வயது-34) என்பவர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற போது தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. உள்ளுர் வீதி ஒன்றில் இருந்து பிரதான வீதியை கடக்கின்ற போது வீதி ஒழுங்கு முறையை சரியாக கவனிக்காமல் சென்றதனால் தான் குறித்த விபத்து துரதிஸ்டவசமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை நேருக்கு நேர் மோதிய தனியார் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்தினை செலுத்திய சாரதியான அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த சமிந்த பிரியதர்சன (வயது-41) என்பவர் குடிபோதையில் இருந்தமையும் மற்றும் உரிய வழித்தட அனுமதி பத்திரம்(வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம்) இன்றி குறித்த பேருந்து அதி வேகத்தில் செலுத்தப்பட்டமையாகும் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

மேலும் திங்கட்கிழமை(7) அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பன வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை அம்பாறை விசேட போக்குவரத்து பொலிஸாரால் குறித்த பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் சாரதிய அனுமதி இன்றி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வீதிச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று சம்மாந்துறை கல்முனை போன்ற பிரதேசங்களில் இருந்து தூர இடங்களிற்கு செல்லும் தனியார் பேருந்து உரிய வழித்தட அனுமதி பத்திரம் (வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம்) இன்றி போக்குவரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...