சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் இருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வது என போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை அரசாங்கம் சேவைகளில் ஈடுபடுத்தி வந்தது. எனினும் போதுமான வருமானம் இல்லை என்பதால் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் நஷ்டமடைந்துள்ளன.
சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமாயின் ஒரு லீட்டர் டீசலை 50 ரூபாவுக்கு வழங்குமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் இந்த கோரிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடியதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் பயணிகளை நிற்க வைத்து அழைத்துச் சென்றால் சட்டத்தை அமுல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏதேனும் ஒரு காரணத்தினால், தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளையும் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.