ஐந்து மணி நேர பணி பகிஸ்கரிப்பின் பின்னர் வழமைக்கு திரும்பிய வவுனியா இ.போ.ச சாலை

Report Print Theesan in போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்களினால் இன்று காலை 5 மணியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பானது 10 மணியளவில் கைவிடப்பட்டு இ.போ.ச வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்களால் இன்றைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா சாலையில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு முறையற்ற வகையில் பழிவாங்கும் விதமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 5 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் 10 மணிவரை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் சாலையின் முகாமையாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆகியோரின் கலந்துரையாடல் மற்றும் உறுதிமொழிகள் காரணமாக காலை 10 மணியளவில் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னரே பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.