போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பில் இன்று முதல் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நான்கு வீதிகளில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் விதிகளை பின்பற்றாத சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி-கொழும்பு வீதி, நீர்கொழும்பு-கொழும்பு வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி மற்றும் நாடாளுமன்ற வீதி ஆகியவற்றில் நாள்தோறும் சுமார் 500,000 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைகின்றன.
இந்நிலையில், சில சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளன.
அதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பேஸ் லைன், ஹைலெவல் மற்றும் காலி வீதி ஆகியவற்றை இலக்காக கொண்ட போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் அமுல்படுத்துவது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முதல் நாளில், வீதி விதிகளை மீறிய சாரதிகள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
விமானப்படையின் உதவியுடன் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விதிகள் குறித்து சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதன்படி, சாலைகளில் போக்குவரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், சட்டத்தை மீறும் சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ட்ரோன் கெமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.