வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை குறைக்க நடவடிக்கை! தினம் ஒரு விமானத்திற்கு மாத்திரம் அனுமதி

Report Print Steephen Steephen in போக்குவரத்து

கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதை குறைக்க நேரிட்டுள்ளதாக கோவிட் 19 வைரஸ் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஒரே நேரத்தில் அதிகளவான தொற்றாளர்கள் நாட்டுக்குள் வருவது ஆபத்தானது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தினமும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வரும் ஒரு விமானத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்திற்குள் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

இதனால், மக்கள் தொடர்ந்தும் சரியான முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

எனினும் சில நபர்கள் இது சம்பந்தமாக காட்டும் அக்கறை போதுமானதல்ல எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.