இன்று முதல் அமுலாகும் பார்க் என்ட் ரைட் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in போக்குவரத்து
367Shares

“பார்க் என்ட் ரைட்” சிட்டி பேரூந்து சேவை முறை இன்று முதல் “மாகும்புர மல்டி மொடல்” போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. “பார்க் என்ட் ரைட்” என்பது மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையாக அமையவுள்ளது.

இதன்படி கொழும்பு நகருக்கு செல்வதற்காக தமது தனி வாகனங்களை பயன்படுத்துவோர் கொழும்பு நகரத்திற்குள் தங்கள் வாகனங்களை செலுத்தமாட்டார்கள்.

தமது பிரத்தியேக வாகனங்களில் கொழும்புக்கு வருபவர்கள் கொழும்புக்கு வெளியே ஒதுக்கப்பட்ட வாகனத்தரிப்பிடங்களில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் பின்னர் கொழும்பு நகரத்துக்குள் செல்வதற்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையைப் பயன்படுத்துவர்.

நகரத்தை அடைந்து தங்கள் பணிகளை முடித்தப்பின்னர் மீண்டும் சொகுசுப் பேரூந்துகளின் மூலம் தாம் வாகனங்களை நிறுத்திய இடங்களுக்கு திரும்பி தாம் வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பமுடியும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்

இந்த திட்டத்தின்கீழ் “மாகும்புர மல்டி மொடல்” அமைப்பு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சொகுசு பேருந்தை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

இந்த பேருந்துகளில் ஒவ்வொன்றிலும் ஒரு வரிசை இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பேருந்துகள் கொரோனா வைரஸை எதிர்க்கும் இரசாயன பூச்சுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன

மேலும், இந்த பேருந்துகளுக்கு வைஃபை வசதிகள் மற்றும் ஜி.பி.எஸ் கண்காணிப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கணனியில் அடுத்த பேருந்தின் வருகையை கண்டறிய தொலைபேசி பயன்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமுனுகம கூறியுள்ளார்

குறித்த பேருந்துகளில் பயணிக்க மின்னியல் அனுமதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பேருந்துகளில் குறிப்பிடப்பட்ட நாணயத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.