ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்குமா? 43 வருட உறவில் அடுத்து என்ன?

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதா அல்லது தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு இங்கிலாந்தில் இன்று நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். நாளை காலை முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கென, 1993ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள், கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளில் எளிதில் குடியேறலாம் என்ற விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது.

படிப்பு, தொழில் தொடங்குதல் உள்ளிட்டவையும் எளிதாக்கப்பட்டிருந்தது. இதனால், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் அதிகளவில் குடியேறினர்.

இதனால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை மற்ற நாட்டினர் பறித்துவிட்டதாகவும், அரசின் நலத்திட்டங்கள் சரிவர கிடைப்பதில்லை என இங்கிலாந்து மக்கள் குற்றம்சாட்டினர்.

ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்த மக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

இங்கிலாந்தில் தற்போது பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பிரதமர் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதில் கேமரூனுக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் 2017 இறுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார்.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையே கேமரூன் விரும்புகிறார். மக்களும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தாலும் இதை எதிர்ப்பவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

குறிப்பாக, ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர்.

கூட்டமைப்பில் இருந்து விலகும்பட்சத்தில் மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக உறவு பாதிக்கப்படும் என்றும், இதனால் வேலைவாய்ப்புகள் குறைந்துபோகும் சூழல் ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.

மேலும், பவுண்ட் மதிப்பு சரியும் வாய்ப்பு உள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றனர்.

இங்கிலாந்து விலகுவதை ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் விரும்பவில்லை. பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜின்பிங், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கியது.

4 கோடியே 65 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்கியது. நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்கெடுப்பு முடிந்தவுடன் 382 மையங்களில் வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன. இதன் முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுமா அல்லது தொடருமா என்பது நாளை தெரியவரும்.

பொது வாக்கெடுப்பு முடிவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தாது.

இருப்பினும் இழுபறி இல்லாமல் மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


You may like this video

Latest Offers

Comments