இங்கிலாந்து குண்டுவெடிப்பின் திக் திக் நிமிடங்கள்!

Report Print Samy in பிரித்தானியா

இங்கிலாந்தின் புகழ் பெற்ற மான்செஸ்டர் நகர மைதானம் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில், குண்டு வெடித்ததில் 22பேர் உயிரிழந்தனர். 59-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உலக நாடுகளை அதிரச் செய்துள்ள இந்த கோரச் சம்பவம் எதற்காக நிகழ்த்தப்பட்டது? யார் நிகழ்த்தினார்கள்? என்பது போன்ற விவரம் எதுவும் தெரியாமல், இங்கிலாந்து போலீசார் திணறி வருகின்றனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர மைதானத்தில், அமெரிக்க பிரபல பொப் பாடகியான அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த இசைநிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர்.

இசை நிகழ்ச்சி முடியும் நிலையில் இருந்த போது கூட்டத்தினிடையே திடீரென்று குண்டு ஒன்று வெடித்தது.

இசை நிகழ்ச்சியின் சப்தத்தில் இதுவும் ஒரு பகுதி...' என ரசிகர்களில் ஒரு பகுதியினர் எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,குண்டு வெடித்த பகுதியில் இருந்து ரசிகர்கள் சிதறி ஓடினர்.

அதனைப் பார்த்த பின்னரே 'ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...'என மற்றப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், குழந்தைகள் - இளைஞர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை!

தற்கொலைப்படை குண்டு வெடிப்பு என்று கூறப்படும் இந்தச் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

மான்செஸ்டர் காவல்துறையினர், 'இது தீவிரவாத தாக்குதலாகவே இருக்கக்கூடும்' என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்த போது கூட அச்சுறுத்தல் எதுவும் எங்களுக்கு வரவில்லை. ஆனால், இருநாட்டு மக்கள் கூடும் பொது இடம் என்பதால், பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்' என்று கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மான்செஸ்டர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக 23 வயதுள்ள இளைஞன் ஒருவரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்துள்ளதாக டிவிட்டரில் அதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான பின்னணியையும் ஆராய்ந்து வருகின்றனர். உளவுத்துறையுடன் இணைந்து இங்கிலாந்து தேசிய பாதுகாப்புப் படையும் விசாரணையில் இறங்கியுள்ளது.

குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், தீவிரவாத அமைப்புகள் 'இங்கிலாந்து குண்டு வெடிப்பு' (England explosion) என்ற ஹாஸ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் நடைபெற்று வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர்ப் படையில் பிரிட்டனும் இடம் பெற்றிருக்கிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தகவலில் அமெரிக்க இசை நிகழ்ச்சி என்பதால் அமெரிக்கர்கள் அதிகமாகக் கூடுவார்கள் என்பதால், திட்டமிட்டே இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினார்களா? அரியானா கிராண்டேவின் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் குண்டு வெடிப்புக்கான முழுமையான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

''இதயம் சிதைந்துபோன உணர்வில் இருக்கிறேன்''

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிமினோ என்ற பெண் தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில், "என் மகளையும் இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தேன்.

திடீரென்று எனது கழுத்துப் பகுதியில் சூடு வைத்தது போன்ற உணர்வை அடைந்தேன். திரும்பிப் பார்க்கையில் சடலமாக கிடக்கிறார்கள். இந்த சம்பவத்தில் எனது மகளை தவற விட்டு விட்டேன்'' என்றார்.

இதற்கிடையில்,இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொப் பாடகி அரியானா கிராண்டே, 'இந்த துயர சம்பவம் குறித்து சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன். இதயம் சிதைந்து நொறுங்கியது போன்ற உணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது' என்று ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தெரசா மே வெளியிட்ட செய்தியில், 'இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்' என்று கூறியுள்ளார்.

2005-ல் லண்டன் சுரங்கப்பாதை மற்றும் பேருந்துகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் குண்டுகளை வீசியதில், 52 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் படு காயமடைந்தனர்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு இங்கிலாந்தில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எனவே, இப்போது இங்கிலாந்து உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Comments