லண்டனில் 40,000 பேர் வேலையிழக்கும் அபாயம்!

Report Print Eelam Ranjan Eelam Ranjan in பிரித்தானியா

லண்டனில் ஒக்டோபர் மாதம் முதல் ஊபர் கால்டாக்ஸி நிறுவனம் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் 40,000 தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதிப்பதாக சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊபர் கால்டாக்ஸி நிறுவனம் சமீபகாலமாக பல குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகின்றது. குறிப்பாக பெண் பயணிகளிடம் பாலியல் வன்கொடுமை புரிவதாக குறித்த நிறுவனத்தின் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய வீதி விதிகளை மீறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உலகத்தின் பல்வேறு இடங்களில் ஊபர் என்ற கால்டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், குறித்த தடை விவகாரத்தை ஆதரிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

லண்டனில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் இங்குள்ள சட்டதிட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு மிக அவசியம். லண்டன் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்த நிறுவனமாக இருந்தாலும் இங்குள்ள சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான முடிவாகும் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைகிறது. இதனால் அக்டோபர் முதல் லண்டனில் ஊபர் நிறுவனம் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஊபர் நிறுவனத்தில் பணிபுரியும் 40,000 தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து ஊபர் நிறுவனம் அடுத்த 21 தினங்களுக்குள் மறுசீராய்வுக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இவ்விவகாரத்தில் ஊபர் நிறுவனம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.