பிரித்தானியாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி! நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Report Print Shalini in பிரித்தானியா
2528Shares

பிரித்தானியாவில் வேலை செய்கின்றவர்கள், விசா முடிவடைகின்ற காலப்பகுதியில் முறையான விண்ணப்பதை மேற்கொண்டு விட்டு முடிவுக்காக காத்திருக்கும் போது, வேலை செய்யும் உரிமை ஆவணத்தை காண்பிக்க தவறினால் உங்களை வேலையிலிருந்து நீக்க முடியாது என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீங்கள் பிரித்தானியாவில் வசித்துக் கொண்டிருந்தால், உங்களுடைய விசா காலாவதியாகும் திகதிக்கு முன்னர் நீங்கள் விசாக்களை புதுப்பிப்பதற்கோ, நீடிப்பதற்கோ அல்லது நிரந்தர வதிவுரிமைக்கான விண்ணப்பங்களை மேற்கொள்வீர்கள்.

இதன் பின்னர் முடிவு வரும் வரை நீங்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்படியான சூழ்நிலைகளில், உங்களுடைய விண்ணப்பங்கள், உள்துறை அமைச்சிடம் நிலுவையில் இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுடைய வேலை இடங்களில், வேலை செய்யும் உரிமை தொடர்பில் (Right to Work) பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

உங்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளதா? என்பது தொடர்பில் முதலாளிகள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

உங்களுடைய விசா காலாவதி திகதிக்குள் நீங்கள் விண்ணப்பம் மேற்கொள்ளும் பட்சத்தில், குடிவரவுச் சட்டம் 3C ofImmigiration Act 1971 படி உங்களுடைய வேலை செய்யும் உரிமை விண்ணப்பத்திற்கு முடிவு எடுக்கும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

உங்களிடம் எந்த ஆவணமும் காண்பிப்பதற்கு இல்லாத பட்சத்திலும், உங்களுக்கான வேலை செய்வதற்கான உரிமை தொடர்ந்து நீடிக்கும் என்பதையே இது காட்டுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்கள் உரிமையை காண்பிக்கச் சொல்லி முதலாளி வற்புறுத்தினால், அவர்களை உள்விவகாரத் திணைக்களத்துடன், Employer Checking Serviceஐ பயன்படுத்தி உங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் படி நீங்கள் தெரிவிக்கலாம்.

பின்வரும் இணைப்பை பயன்படுத்தி உங்களுடைய முதலாளி இதனை மேற்கொள்ளலாம்.

https://www.gov.uk/employee-immigration-employment-status

ஆனால், நடைமுறையில் இதை மேற்கொள்ள முயற்சிக்காமல், சில முதலாளிகள் வேலையிலிருந்து உங்களை விலக்குவதற்கு முயற்சிக்கலாம்.

இது போன்ற ஒரு வழக்கு அண்மையில் பிரித்தானிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில், “பிரித்தானிய Employment Appeal Tribunal வேலைக்கான உரிமையை காண்பிப்பதற்குரிய ஆவணம் இல்லாததை மட்டும் வைத்து ஒருவரை வேலையில் இருந்து நீக்குவது நீதியான காரணமாக அமையாது” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Baker v Abellio London Ltd [2017] எனும் வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, முதலாளி தன்னுடைய வேலையாளுக்கு வேலை செய்யும் உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தினால், (விண்ணப்பம் சரியான நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டது அத்துடன், உள்விவகாரத் திணைக்களத்திடமிருந்து Employer Checking Service க்கு சாதகமான பதில் கிடைத்தது என்பதன் மூலம்) அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது.

ஆனால், உங்கள் முதலாளி உங்களுக்கு வேலை செய்ய அனுமதி இல்லை என்று நியாயமாக நம்பும் பட்சத்தில் (Genuine believe) அவர்கள் நியாயமற்ற முறையில் உங்களை வேலையிலிருந்து நீக்கினார்கள் என்று விவாதிப்பதும் கடினமே.

குறிப்பாக சொல்லப் போனால், வேலை செய்யும் உரிமை உள்ளது எனும் ஆவணத்தை காண்பிக்க தவறியதை வைத்து உங்களை உங்கள் முதலாளி வேலையிலிருந்து நீக்க முடியாது என்பதையே இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது.

அவ்வாறு முதலாளிகள் நடந்தால், உங்களுடைய வழக்கறிஞர்கள் முதலாளிகளைத் தொடர்பு கொண்டு இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். இல்லாவிட்டால், அவர்களுக்கு எதிராக நீதியற்ற முறையில் வேலையிலிருந்து நீக்குதல் (Unfair Dismissal) என்ற முறையில் நீங்கள் வழக்குத் தொடரலாம்.

இந்த தீர்ப்பின் முழு வடிவத்தை நீங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

http://www.bailii.org/uk/cases/UKEAT/2017/0250_16_0510.html

தகவல் Jay Visva Solicitors