தடை விதித்தது சீனா! பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Report Print Murali Murali in பிரித்தானியா

பிளாஸ்டிக் குப்பை இறக்குமதிக்கு சீனா விதித்துள்ள தடையால் இங்கிலாந்தில் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கிலாந்தில் இருந்து சுமார் 5 லட்சம் டன் வரை பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மறுசுழற்சிக்காக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிநாடு குப்பை கழிவுகள் இறக்குமதிக்கு இந்த மாதம் சீனா திடீரென தடை விதித்தது. சீனாவின் தடை காரணமாக இங்கிலாந்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளன.

இது தொடர்பாக தலைமை நிர்வாகி சைமன் எலின் கூறுகையில், ‘‘குறுகிய காலத்தில் இந்த பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என தெரியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்னை.

இது எங்களது தொழிற்சாலைகளின் போக்கையே மாற்றியமைப்பதாக உள்ளது. 55 சதவீதம் பேப்பர், 25சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளை அனுப்புவதற்கு நாங்கள் நீண்ட ஆண்டுகளாக சீனாவையே சார்ந்திருந்தோம்.

இங்கிலாந்தில் இதற்காக மார்க்கெட் கிடையாது. இது எங்கள் தொழிற்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார். சீனாவின் தடை காரணமாக இங்கிலாந்தில் பிளாஸ்டிக் தேங்கத்தொடங்கியுள்ளது.

எனவே குப்பைகளை எரிக்கும் சூழலுக்கு தள்ளப்படலாம் என கருதப்படுகிறது. அரசு சங்கத்தை சேர்ந்த பீட்டர் பிலெம்பிங் கூறுகையில், “ எரித்தல் என்பது கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு பகுதி மட்டும் தான்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க முடியாது. இது மிகவும் சவாலானது. நீண்ட காலத்திற்கான கழிவு உத்தி என்பது நமக்கு மிகவும் தேவையாகும்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது தொடர்பான எந்த ஒரு முடிவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக்களை எதிர்கொள்வதாக அமையும். எனவே கழிவுகளை எரித்தல் என்பது ஒரு தவறான தீர்வாகும்” என்றார்.

இதேபோல் கீரின்பீஸ் பகுதியை சேர்ந்த லூயிஸ் எட்ஜ் கூறுகையில், “ அரசு தொடர்ந்து முடிவுகளை தள்ளிப்போட்டதால் தான் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எரித்தல் என்பது சரியான முடிவல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலமாக அதிக கார்பன் மூலக்கூறுள்ள புதுப்பிக்க முடியாத மின்னாற்றல் வெளியாகிறது.

இதனுடன் நச்சு தன்மை கொண்ட ரசாயனங்களும் வெளிவருகின்றது. எரியூட்டிகளை அமைத்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஒரு சந்தையை உருவாக்குவதாக உள்ளது.

ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் முறையை தான் நாம் தற்போது குறைக்க வேண்டிய சூழலில் உள்ளோம். அரசு ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்கள் மீது அரசு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும்” என்றார்.

ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் பிளாஸ்டிக்கை குறைப்பை இலக்காக வைக்க வேண்டும். வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். எளிதான விதிகளை கொண்டுவரவேண்டும்.

இதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.