இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு பிரித்தானியாவிடம் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை

Report Print Eelam Ranjan Eelam Ranjan in பிரித்தானியா

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி, பிரித்தானியத் தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்றைய தினம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த பாரிய தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகள் சர்வதேச ரீதியில் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் இன்றும் ஈழத்தமிழர்கள் பல இரகசிய முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் இந்த கண்மூடித்தனமான செயற்பாடுகளுக்கு பிரித்தானியா போன்ற சர்வதேச நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்கின்றதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதனை நிறுத்தக்கோரி பிரித்தானியத் தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ச்சியாக சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் லெட்சுமன் தெய்வேந்திரம் தலைமையில் சிவராஜா சிவசுதன், குகேந்திரன் பத்மலோஜினி, ஜதுனா சதானந்தன், சுரேஸ் குணரத்னம் ஆகிய புலம்பெயர் தமிழர்கள் டாட்போட் தொகுதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் ஜோன்சனை சந்தித்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் பிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதங்களை தொடர்ந்து விற்பனை செய்வது ஏற்புடையதல்ல என அவர்கள் சுட்டிக்காட்டியதுடன் உடனடியாக இந்த ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேசமயம் ஆயுத விற்பனையை நிறுத்துதல் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் ஜோன்சன்,

அப்பாவி மக்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா என்றைக்கும் துணை போகாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானிய பாதுகாப்புச் செயலருக்கு குறித்த விடயம் தொடர்பாக தெரிவிப்பதாகவும், தம்மை சந்தித்தது போன்று ஏனைய நாடாளுமன்ற உருப்பினர்களையும் சந்தித்து ஆயுத விற்பனையை நிறுத்த ஆதரவு கோருமாறும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.