பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த தமிழ் இளையோர் கடும் பிரயத்தனம்!

Report Print Suky in பிரித்தானியா

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், குறித்த விவகாரம் வெகுவிரைவில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தகவல் நடுவத்தில் (TIC) நேற்று மாலை பிரித்தானிய கிங்ஸ்டன் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மற்றும் ஆயுத விற்பனைக்கெதிரான ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பணிப்பாளர் வி.வரதகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது இதற்கான சமிக்ஞை பிறந்துள்ளது.

நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கெதிராக சிங்களப் பேரினவாதத்தால் நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் பின்னரான தற்போதைய நல்லாட்சி காலத்திலும், அரசின் இரும்புக்கரம் ஓங்கிய நிலையே காணப்படுகின்றது.

தமிழர் வாழ் பிரதேசமான வடக்கு கிழக்குகளில் இராணுவ மயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதன் பின்னணியில் பிரதான காரணியாக ஆயுதக் கொள்வனவு காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்யும் பிரித்தானியா உடனடியாக அதனை நிறுத்த வேண்டுமென்றும். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள். சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என சுமார 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இதுவரையில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆயுத விற்பனையை நிறுத்த அழுத்தம் கொடுக்க கோரி வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் இந்த செயல்த்திட்டத்திற்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் அசாந்தன் மற்றும் சக ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தலைமையுரையாற்றிய ரி.ஐ.சி.யின் பணிப்பாளர் வரதகுமார், இருகர அரசியலைக் கையாளும் பிரித்தானியா ஒரு கையால் மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டு மறு கையால் மனித உரிமை மீறலுக்கு காரணியான ஆயுத விற்பனையை செய்கிறது ஏன்? என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி யிடம் முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட எட் டேவி குறித்த விடயத்தை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த தாம் முன்னின்று செயல்படுவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சியுடனும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களின் ஆதரவுடன் இதனை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த செயலாற்றுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.