பிரித்தானிய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்று

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானிய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்று

பிரித்தானிய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் தெரேசா மே-யினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் திட்டம் 230 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்.

குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பே இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலையான கால நாடாளுமன்ற சட்டத்தின் கீழ், அதன் நடைமுறைகள் பின்பற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்று மீளவும் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முதலில் உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் தெரேசா மே முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதன் பின்னர் பிரித்தானிய நேரப்படி இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம். தோல்வியுற்றால், 14 நாட்களுக்குள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டுமென குறித்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வார கால அவகாசத்தில் எத்தனை முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற சட்ட வரம்பு எதுவும் கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் செயற்பாட்டிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். பின்னர், இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென பலர் வலியுறுத்திவந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் நேற்றிரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறித்த வாக்கெடுப்பில் பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் திட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் ஏற்படுத்தப்பட்ட தோல்வியானது பிரித்தானிய அரசியல் வரலாற்றில், அரசாங்கமொன்று பெற்றுக்கொண்ட மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளது.