உடனடியாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட, தமிழர்களை அச்சுறுத்திய பிரியங்க பெர்ணான்டோ?

Report Print Ajith Ajith in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விடயத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன், இந்த கேள்வியை வெளியுறவு பொதுநலவாய விடயங்களுக்கான செயலாளரிடம் கேட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டம் ஒன்று லண்டனில் இடம்பெற்ற போது பிரியங்க பெர்ணான்டோ, போராட்டக்காரர்களை அச்சுறுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இது குறித்தே நேற்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த பிரித்தானியாவின் ஆசிய பிராந்தியங்களுக்கான ராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்,

இந்த சம்பவம் இடம்பெற்ற பின் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதியன்று நான், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை தொடர்பு கொண்டேன்.

இதனையடுத்தே பிரியங்க பெர்ணான்டோ திருப்பியழைக்கப்பட்டார். இந்தநிலையில் பொதுநலவாய விடயங்களுக்கான அலுவலகம், பிரியங்க பெர்ணான்டோ தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்துக்கு வழங்கியது

வியன்னா உடன்படிக்கையின்படி ராஜதந்திர உறவுகள் தொடர்பிலான ஒழுங்குகளுக்கு பிரித்தானியா உடன்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கையின் வெளியுறவுத்துறை செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் சந்தித்ததாகவும் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் ராஜதந்திர விதிவிலக்கு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தை வெளியுறவுத்துறை செயலாளர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அறிவித்ததாக பீல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் சட்ட விடயங்களில் ஒரு கட்சியாக செயற்படவில்லை.

எனினும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு அமைய பிரிகேடியரின் ராஜதந்திர தகுதி தொடர்பில் விளக்கங்களை வழங்கியதாக மார்க் பீல்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.