இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவது தொடர்பாக இன்று வாக்கெடுப்பு!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவது தொடர்பாக இன்று வாக்கெடுப்பு!
167Shares

மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கவுள்ளார்கள்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இன்று இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின்போது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரெக்ஸிற்றை பிற்போடுவது தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான இறுதி வாய்ப்பை பிரித்தானியா இழந்துவிட்டது: மொஸ்கோவிச்சி

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான இறுதி வாய்ப்பை பிரித்தானிய பாராளுமன்றம் இழந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையர் பியர் மொஸ்கோவிச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதையடுத்தே மொஸ்கோவிச்சி இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தம்மால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்துள்ளதாகவும் இப்போது தமக்கு என்ன வேண்டும் என்பதை பிரித்தானியா தான் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இப்போது பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் மொஸ்கோவிச்சி தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு தோல்வியடைந்தமை வருத்தமளிக்கிறது!- பிரதமர் மே

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமை வருத்தமளிப்பதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்ததையடுத்து, நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையிட்டு நாம் மிகவும் வருந்துகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையுடன் வெளியேறி அரசாங்கத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்லவே நாம் எதிர்ப்பாத்திருந்தோம். இதுதொடர்பான எனது கடமைகளை நான் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பாக மேற்கொண்டிருந்தேன்.

இதுதொடர்பாக நான் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுடனேயே காணப்படுகிறேன். எவ்வாறாயினும், மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா ஒப்பந்தமில்லாமல் வெளியேற விரும்புகிறதா என்பதை அறிந்துக் கொள்வதற்காக நடைபெறும் வாக்கெடுப்பானது, மிகவும் முக்கியமான ஒன்றாகவே தற்போது நான் கருதுகிறேன்.

எமது நாட்டின் எதிர்க்காலத்திற்கு முக்கியத்துவம் வழங்கி, நாடாளுமன்றின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் நான் எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த கௌரவமான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பும் விடுக்கிறேன்.

அத்தோடு, அயர்லாந்து விவகாரம் தொடர்பாக பிரதமராக நான் எனது கடமைகளை உணர்கிறேன் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த வரலாற்று முடிவை எடுப்பதற்கு நாடாளுமன்றம் பெரும்பான்மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.