பிரித்தானிய நாடாளுமன்றம் எதிர்ப்பு! மூன்றாவது தடவை வாக்கெடுப்பு..

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உடன்பாடற்ற பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பின்போது நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் உடன்பாடற்ற பிரெக்ஸிற் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வாக்கெடுப்பில் உடன்பாடற்ற பிரெக்சிற்றுக்கு ஆதரவாக 308 உறுப்பினர்களும் எதிராக 312 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மீண்டுமொரு முறை உடன்பாடற்ற பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு உள்ளானபோது ஆதரவாக 278 உறுப்பினர்களும் எதிராக 321 உறுப்பினர்களும் வாக்களித்த காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற் 43 வாக்குகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரெக்ஸிற்றை பிற்போடுவது தொடர்பான வாக்கெடுப்பு இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்றாவது தடவை வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ள பிரதமரின் ஒப்பந்தம்!

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டுமொருமுறை அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாக்கெடுப்பின்போது மறுபடியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒப்பந்தத்தை நிராகரித்தால் பிரெக்ஸிற் நீண்ட காலத்துக்கு பிற்போடப்படக்கூடும் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல்தடவையாக பிரெக்ஸிற் ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு உள்ளானபோது நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டதுடன் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து திருத்தியமைக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பின்போதும் தெரேசா மே-யின் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

பிரெக்ஸிற் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும்பொருட்டு நேற்றையதினம் உடன்பாடற்ற பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது உடன்பாடற்ற பிரெக்ஸிற் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இன்று பிரெக்ஸிற்றை பிற்போடுவது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் தமது ஒப்பந்தம் மீண்டுமொருமுறை வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படுமென தெரேசா மே தெரிவித்துள்ளார்.