பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நான்கு இலங்கையர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த நான்கு பேருக்கும் எதிராகவும் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை லண்டனின் லூட்டன் விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கையர்கள், அங்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது விமான நிலையத்திலுள்ள குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் இலங்கையில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய பொலிஸார் அறிவித்தனர்.

அவர்கள், பெட்போர்ட்சைர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக எந்த அறிவிப்பையும் பிரித்தானிய பொலிஸார் வெளியிடவில்லை.

இந்நிலையில் பிரித்தானிய ஊடகம் ஒன்று பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போதே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நால்வரிடமும் விசாரணைகள் தொடரும் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.