பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமரை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் 126 வாக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பிரதமர் பதவியை தெரசா மே அண்மையில் இராஜினாமா செய்தார்.

இதனால் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியாக அக்கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினர்.

பிரித்தானிய மக்களவையில் கடந்த 13ம் திகதி நடந்த இதற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், போரிஸ் ஜோன்சன் அதிகபட்சமாக 114 வாக்குகளையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் 43 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மிஷெல் கோவ் 37 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்த சுற்றுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள குறைந்தது 17 வாக்குகளாவது பெற வேண்டும் என்ற நிலையில் மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லெட்ஸம், எஸ்தர் மெக்வீ ஆகியோர் அதைவிடக் குறைவான வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினர்.

இதனால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 7 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும், இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

அதில், போரிஸ் ஜோன்சன் 126 வாக்குகளுடன் முதல் இடத்திலும், ஜெர்மி ஹன்ட் 46 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், மிஷெல் கோவ் 41 வாக்குகளும், ரோரி ஸ்டூவார்ட் 37 வாக்குகளும், சஜித் ஜெவிட் 33 வாக்குகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இரண்டாம் சுற்றுக்கான வாக்கெடுப்பில் 33க்கும் குறைவாக வாக்குகள் பெற்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், 7 பேரில் டோமினிக் ராப் 30 வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் போரிஸ் ஜோன்சன் முன்னிலை பெற்றுள்ளதால், அவர் வாக்களித்தவர்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக போஸ்டல் வாக்கு எண்ணிக்கை முறையில் பிரதமர் தெரிவு செய்யப்படுவார்” என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers