பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு!

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தெரசா மே கடந்த மாதம் அறிவித்தார்.

பிரித்தானியாவை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவரே, நாட்டின் பிரதமராகவும் செயற்படுவார் அந்த வகையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான போட்டி தொடங்கியது.

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் வாக்குகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்தன. நேற்றுடன் வாக்களிக்கும் காலம் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளன.

Latest Offers