வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

Report Print Dias Dias in பிரித்தானியா

நிலைமையின் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசின் செயலைக் கண்டிப்பதுடன் இலங்கை அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை”ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையாக முன்வைத்து 29 ஜனவரி 2020 அன்று 4 மணியிலிருந்து 7 மணி வரை பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் பல்வேறு புலம்பெயர் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து சாட்சியாளர்களாக இருப்பவர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.

11 வருடங்களின் முன் இதே தினத்தில் (29 ஜனவரி 2009) தன்னை தற்கொடையாக்கிய தமிழ்நாட்டு உறவு தியாகி முத்துகுமாரனின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாணவர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய செயல்பாட்டாளருமான பொ. சத்தியசீலன் உரையாற்றும் போது,

பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று இங்கு குழுமியிருக்கும் சகல அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக அமைய வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த காலகட்டத்திலேயே வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் தாயகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் புலம்பெயர் நாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் இலங்கை அரசாங்கத்திடம் நீதி வேண்டி போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இறுதி யுத்தத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை, எல்லோரும் இறந்து விட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கூறும் கூற்று கண்டிக்கப்பட வேண்டியது.

மேலும் பொதுநலவய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை தடை செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் செயலணியின் உதவிப் பொறுப்பாளரும் இளம் செயற்பாட்டாளருமான வேந்தனா கூறும்போது,

நானும் இறுதி யுத்தத்தின் சாட்சியாளர். இறுதி யுத்தத்தில் நாம் பல இன்னல்களை சந்தித்தித்தோம். இலங்கை இராணுவ முகாம் நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே கைதுசெய்யப்பட்டனர். நாம் இலங்கை முகாமுக்குள் வரும்போது அவர்களில் பாதி பேரை காணவில்லை. இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? இலங்கை அரசாங்கமே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான முழுப் பொறுப்பும் உடையது.

மேலும் இன்றைய போராட்டம் போன்று நாம் மேலும் அனைவரும் ஒன்றாக ஓங்கி குரல் கொடுத்து எமக்கான நீதியை வென்றெடுப்போம், என்றார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர் சந்துரு குருலிங்கம், தனது உரையில்,

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு, தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நடந்தவற்றின் முடிவு தெரியாதவிடத்து 'உண்மையை அறிவதற்கான உரிமை' இருக்கிறது என்பதைச் சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கிறது.

மேலும் கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்படும் குற்றத்திலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 2015 டிசம்பர் 15 அன்று இலங்கை கையொப்பமிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் 21வது பிரிவின்படி, காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதோடு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு 'காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன என்ற உண்மையை அறிந்து கொள்வதற்கான உரிமையையும்' அளிக்கிறது.

இலங்கை அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இப்போது உயிருடன் இல்லை என்பதை எந்த அடிப்படையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் வெளியிடுகின்றனர் என்ற என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

அதனை தட்டிக் கழிக்குமானால், அது காணாமற் போனவர்களின் குடும்பங்களின் துன்பத்தை நீடிக்கச் செய்வதோடு, அவர்களது மனித உரிமைகள் மீறப்படும் குற்றத்தையும், சர்வதேச சட்டத்தின்கீழ் பல்வேறு கடப்பாடுகளிலிருந்தும், மனித உரிமைகள் சபையின் தீர்மானம் A/HRC/RES/31/1 முன்வைத்த கடப்பாடுகளிலிருந்தும் தவறிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், இதற்கு நிகரான ஓர் சர்வதேசப் நீதிப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் என்பதோடு இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவோம், என்று தெரிவித்தார்.

வரலாற்று மையத்தைச் சேர்ந்த சங்கீதன் உரையாற்றும்போது,

இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தினர் படுகொலையானது வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல அவர்கள் பல மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கடைசி யுத்தத்தில் கூட மத போதகர்களோடு போனால் எமக்கு பாதுகாப்பாக இருக்கும், ICRC ஊடாக சரணடைந்தால் பாதுகாப்பு என்று இராணுவத்திடம் சரணடைந்ததவர்கள் எங்கே? குடும்பமாக சரணடைந்ததவர்கள் எங்கே? கொல்லப்பட்டனர் என்பதின் அர்த்தம் என்ன? எமக்கான நீதி எங்கே இந்த இக்கட்டான நிலையில் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று கூறினார். மற்றும் இறுதி யுத்தத்தில் இராணுவத்தால் இழைக்கப்பட மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்களை தெளிவுபடுத்தினார்.

அகேனம் அறக் கட்டளையைச் சேர்ந்த ஜீவன்,

எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நம் மக்களுக்கான நீதி வேண்டி ஒன்றாக குரல் கொடுப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்பொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தான் எமது விடுதலையென்பது தங்கியிருக்கிறது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் மக்களை குறிப்பாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களைப் பார்த்து இப்பொழுது ஜனாதிபதி ராஜபக்ச பயப்படுகின்ற காலகட்டத்தில் இருக்கின்றார்.

இலங்கையை பகிஸ்கரியுங்கள் (Boycott Srilanka) என்பதை வலியுறுத்துகிறேன். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களையோ அல்லது விடுமுறைக்காக இலங்கை செல்வதையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பொருளாதார ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துவது மூலம் உலக நாடுகளின் பார்வைக்கு எடுத்து செல்ல முடியும்.

சிங்கள மக்களுக்கு எங்களின் வலிகளும், இழப்புக்களும் தெரியவில்லை. அதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் இருக்கின்றது. நாம் என்றும் ஒற்றுமையுடன் பலமாகப் போராடினால்தான் எம் தேசம் எமக்கு கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் "Getty images" என்ற பிரித்தானிய ஊடகமும் உக்ரைன் நாட்டின் ஊடகமும் பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் செயல்பாட்டாளர்களைப் பேட்டி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...