ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றது பிரித்தானியா!

Report Print Murali Murali in பிரித்தானியா

நீண்ட இழுபறிக்கு பின்னர் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது.

2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முடிவெடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பிரெக்ஸிட் அவ்வளவு எளிதாக அமையவில்லை.

2016ம் ஆண்டு ஜூன் மாதம்பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர்.

இதன் பிறகு பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட அங்கு அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்தன.

டேவிட் கேமரன், தெரசா மே உள்ளிட்டோர் பிரதமர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. தீவிர வலதுசாரியான போரிஸ் ஜான்சன் பிரதமரானார்.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீருவேன் என்ற தனது வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியப்படவில்லை.

பிரெக்ஸிட் உடன்படிகை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்குச் சென்றார்.

தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றியும் பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் நீடிக்காமல் உடனடியாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றார்.

பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அவ் ஒப்பந்தம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேறியது.

பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்ற பின்னர், பிரெக்சிட்டுக்கு பிரித்தானிய ராணி 2ம் எலிஸபெத்தும் தனது ஒப்புதலை வழங்கினார்.

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரித்தானியா எடுத்த இம்முடிவின் மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 பேரும், எதிராக 49 பேரும் வாக்களித்தனர்.

இதன் மூலம் நீண்ட இழுபறிக்குப் பின் பிரித்தானியா இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி வெளியேறுகிறது.

பிரித்தானியாவின் நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு வெளியேறவிருக்கிறது. அத்துடன் பிரெக்ஸிட்டும் முடிவுக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்...

ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு.

28 நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் , மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பணிக்கு செல்வது, தங்கு தடையின்றி குடியேறுவது போன்ற சுதந்திரம் உள்ளது.

1973ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த பிரிட்டன் 2020ம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகுகிறது.

பிரெக்ஸிட் நிறைவேறிய பின்னர் என்ன நடக்கும்...

பிரித்தானியா, தனிநாடாக பிரிந்தாலும் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள 11 மாதங்கள் அளிக்கப்படும். அதாவது எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவிற்கு இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதால் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள 73 பிரித்தானிய எம்பிக்கள் தங்கள் பதவியை இழப்பர்.

அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புகள் அனைத்தில் இருந்தும் பிரித்தானியா விலகிவிடும். வழக்கமாக நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கமாட்டார்.

வர்த்தக உறவு குறித்து மற்ற நாடுகளுடன் பிரித்தானியா அரசு சுதந்திரமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும். பிரித்தானியா கடவுசீட்டுகள் மீண்டும் நீல நிறத்திலேயே விநியோகிக்கப்படும்.

பிரெக்ஸிட்டை கொண்டாடும் வகையில் ஜனவரி 31ம் திகதி என பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும்.

பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படும்.

பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலோ வசிப்பதிலோ அல்லது பணியாற்றுவதிலோ எவ்வித தடையும் இருக்காது.

தனிநாடாக பிரித்தானியா தனது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. பிரித்தானியா வெளியேறுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers