கொரோனாவின் தீவிரம்! இத்தாலி போன்று பிரித்தானியாவும் முழுமையாக முடங்கும் என எச்சரிக்கை

Report Print Sujitha Sri in பிரித்தானியா

`வேலை மற்றும் உடல்நலன் பிரச்சினைகளை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என இத்தாலியில் நாடு முழுவதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் பொது இடங்களில் கூடுவது மற்றும் பொது இடங்களை திறந்து வைப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது அடுத்த சில வாரங்களில் பிரித்தானியாவிற்கும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இது வரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் தேவை ஏற்படலாம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக பிரித்தானியாவும் அடுத்த சில வாரங்களில் இத்தாலி போன்று நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் பிராங்கோயிஸ் பலூக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரித்தானியா தற்போது வட இத்தாலியின் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், பிரித்தானியாவின் Southall நகரில் வசிக்கும் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.