பிரித்தானியாவில் சுயதொழிலாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலால் முடங்கிப்போயிருக்கும் சுயதொழில் புரிவோருக்கு மாதம் 2,500 பவுண்டுகள் அளிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் ரிஷி சுனக்.

தங்கள் தொழில் மற்றும் வருவாய் தொடர்பில் கவலையுற்றிருக்கும் பிரித்தானியாவின் சுயதொழில் புரிவோரை அரசு மறக்கவில்லை என கூறிய சுனக்,

அரசாங்கத்தால் ஒவ்வொரு வேலையையும் பாதுகாக்கவோ அல்லது ஒவ்வொரு வணிகத்தையும் காப்பாற்றவோ முடியாது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தற்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்த 2,500 பவுண்டுகள் திட்டமானது கடந்த 3 ஆண்டுகளில் சராசரி மாத லாபத்தில் 80 சதவீதத்தில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளதாக சுனாக் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆண்டு ஒன்றுக்கு வர்த்தகத்தில் £ 50,000 க்கும் அதிகமாக இலாபம் ஈட்டுபவர்கள் இந்த திட்டத்தில் தகுதி பெற மாட்டார்கள்.

மேலும், சுயதொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் 95 சதவீதம் பேர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என பிரித்தானிய நிதி அமைச்சர் சுனக் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உதவும் என்று நான் நம்புகிறேன் என நிதியமைச்சர் சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் இந்த காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும்:

1.உணவு வாங்க, மருந்து வாங்க, செல்லப்பிராணிகளின் உணவுக்காக

2.உடற்பயிற்சிக்காக

3.மருத்துவ உதவி நாடி செல்லல்

4.உடல் நலம் குன்றியவர்களுக்கு உதவ செல்லல்

5.இரத்த தானம் செய்ய செல்லல்

6.வேலைக்காக பயணிக்க அல்லது தன்னார்வ அல்லது தொண்டு சேவைகளை வழங்க செல்லல்

7.குடும்ப உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு செல்லல்

8.நீதிமன்றத்தில் ஆஜராக அல்லது ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அல்லது சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க செல்லல்.

கொரோனா வைரஸ் வேகப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருக்கும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியர்கள் கைது செய்யவோ அல்லது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என தெரியவந்துள்ளது.

உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உடன்படாத நபர்களுக்கு 60 பவுண்டுகள் பிழையாக விதிக்கப்படும், 14 நாட்களுக்குள் குற்றத் தொகையை செலுத்துவதாக இருந்தால் அது 30 பவுண்டுகளாக குறைக்கப்படும்.

இரண்டாவது முறையும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியருக்கு 120 பவுண்டுகள் குற்றப்பணமாக விதிக்கப்படும், இதே நிலை நீடித்தால் அதிகபட்சமாக 960 பவுண்டுகள் வரை குற்றப் பணம் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குற்றத் தொகையை செலுத்த மறுக்கும் நபர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது.

பொலிஸ் அதிகாரிக்கு உங்கள் பெயரையும் முகவரியையும் கொடுக்கத் தவறினால் அது புதிய அதிகாரங்களின் கீழ் கைது செய்யக்கூடிய குற்றமாகும் எனவும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.