பிரித்தானிய பிரதமர் குணமாக வேண்டும்... அவர் குணமாகினால்... சில சந்தேகங்கள்!

Report Print Tamilini in பிரித்தானியா

உலகையே முடக்கி, மக்களை அடக்கி வேகமாக தொற்றுக்குள்ளாகி மனித உயிர்களை பறித்துவரும் கொடியவைரஸாம் கொரோனா வைரஸ் எந்தவித வேறுபாடுமின்றி தொற்றிக்கொண்டு வருகின்றது.

இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் நடந்தாலும் இன்னும் முடிவின்றி இன்று எத்தனை மரணமோ, நாளை என்னாகுமோ என ஒவ்வொருவராலும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது கொரோனா.

உலக நாடுகள் சிலவற்றில் பல மக்கள் வறுமையின் மத்தியில் வாடிக்கொண்டிருக்கின்றனர். சிலநாடுகளில் வழங்கப்படும் நிவாரணங்களில் கூட குளறுபடி ஏற்படுவதால் வறுமையின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு வயிற்றில் அடி விழுகிறது.

ஒருபக்கம் வறுமை, ஒருபக்கம் கொரோனா பீதி என உலகமே திணறிக்கொன்டிருக்கின்றது. உலக சுகாதார அமைப்போ என்னசெய்வது, எப்படி முடிவுக்கு கொண்டுவரலாம் என விழிபிதுங்கி இருக்கின்றது.

இவ்வாறு தொடரும்கொரோனா வைரஸ் கொடுந்துயரில் உலகம் சுழன்று கொண்டிருக்கையில், பிரித்தானிய பிரதமரும் தொற்றுக்குள்ளாகி 10 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பின்னர்நோயின் அறிகுறி எதுவும் குறையாது உடல்வெப்பநிலை அதிகரித்ததையிட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவனைக்கு சென்றிருந்தார்.

ஆனால் மருத்துவமனையில் அவருக்கு ஏற்பட்ட சுவாச சீரின்மையால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், அமெரிக்க ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் என பல்வேறு தரப்பட்ட உயரதிகாரிகளும் பிரபலங்களும் ஏன் பற்றுள்ள நாட்டு மக்களும்அவர் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருப்பதோடு வேண்டுதல்களையும் செய்துவருகின்றனர்.

ஆனாலும் கொரோனா நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்திய பிரதமர் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி திரையில் தோன்றி கைகளை நன்கு கழுவுங்கள், Stay at Home என மக்களுக்கு அடிக்கடிசொல்லி வந்தார். 8 வயது சிறுமி கூடபிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கையை கழுவ மறக்கவில்லையே என எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் பிரதமரே நீங்கள் கைகளைக் கழுவவில்லையா, இல்லை பாதுகாப்பு முகக்கவசம் தான் அணியவில்லையா எவ்வாறு உங்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதும் கேள்விக்குறியே....

ஆனாலும் தினம் தினம் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை தன் நாட்டில் பார்த்த பிரதமரும் கொரோனாவை ஒரு சாதாரணமாக நினைத்தார் போலும். நாட்டை முடக்காது பல மக்களின் அழுத்தங்களின் பின்னரே முடக்கிவிட்டேன் என்ற போர்வையில் சிலவற்றை முடக்கினாலும் மக்களை வெளியில் நடமாட அனுமதித்திருந்தார்.

பிரித்தானியாவில் பலரைக் காவுகொண்ட கொரோனா பிரதமரையும் தாக்கியது, தனியாக அடைத்தது. ஆனாலும் அவர் திரையில் தோன்றினார். கொரோனா தொற்றினால் இருமல், தும்மல் தொண்டைவலி சுவாசக்கோளாறு இருக்கும் எனபலர் சந்தேகம் கொண்டனர். அதுமட்டுமன்றி பிரதமர் திரையில் தோன்றி 2 நிமிடம் பேசினாலும் இதில் எந்தவித அறிகுறியையும் காணமுடியவில்லையே என விமர்சித்தனர். பிரதமருக்கு கொரோனா இல்லை என முடிவுசெய்தனர் பலர்.

இதுநிற்க, பிரதமர் எதிர்க்கட்சியினரை கொரோனாவை எதிர்த்து போராட கைகோர்க்குமாறு கேட்டிருந்த நிலையில் , தொழிலாளர் கட்சி தலைவரும் கொரோனா விசயத்தில் பிரதமர் மாபெரும் தவறிழைத்துவிட்டார் என தெரிவித்ததும் மக்கள் அனைவர் கவனமும் இவர் மீது திரும்பியது.

ஆனால் பிரதமர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மக்கள் கவனம் முழுதும் சிதறி ஜோன்சன் மீது குவியத் தொடங்கின.

பிரதமர் போரிஸ் ஜோன்சன், வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஐ பிரதமர் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதே தவிர, ஆனால்அவர் ஒரு தற்காலிக பிரதமர் அல்ல என்கின்ற கருத்து முன்வைக்கப் பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பிரித்தானிய பிரதமரின் கொரோனாவில் அரசியல் நாடகம் ஒழிந்திருக்குமோ என்ற ஐயங்களும் எழுகின்றன.

இதுநிற்க, இவ்வாறு பிரித்தானிய பிரதமரைக் குணப்படுத்தவேண்டி போராடும் மருத்துவர்களும், போராடச்சொல்லி தூண்டுவதையும் வேண்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் பிரபலங்கள் நாட்டு மக்களுக்காக ஏன் இதுவரையில் இவ்வாறு வேண்டிக்கொள்ளவில்லை.

பிரதமர் நன்கு குணமாக வேண்டும் என்பதே நம் பலரது பிரார்த்தனையும்...

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலாவது மரணம் கடந்த மார்ச் 11ஆம் திகதி பதிவானது. 2 என்ற எண்ணிக்கையில் பதிவான மரணங்கள் அண்மைய நாட்களில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையாக மாறியிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் அது 800 வரையான மரணங்களாக பதிவாகி இன்றுவரை மொத்தமாக 5373 ஆக உயர்ந்து பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றது.

மரண வீதங்கள் அதிகரிக்கும் வேளையில் முறையான நகர முடக்கங்களை பிரித்தானிய பிரதமர் மேற்கொண்டிருந்தால் இந்தளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், பிரதமரைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கையை கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், தாதிமார், மருத்துவ பணியாளர்கள் என அவர்களை ஏன் காப்பாற்ற முடியாமல் போனது.

பிரதமர் நாட்டுக்கு முக்கியம் போன்று இன்றைய சூழலில் மருத்துவர்கள் மிகமிக முக்கியம் அல்லவா.... காப்பாற்றியிருக்கலாமே...

அதுபோன்று வயதானவர்களை காப்பாற்ற முடியாது என்றே எடுத்துக்கொள்வோமானால் வயது குறைந்த தொற்று நோயாளிகளையாவது பிரதமருக்கு செய்யும் சிகிச்சை மூலம் காப்பாற்றியிருக்கலாமே...

என பல்வேறு சந்தேகங்கள் தான் இன்று முளைப்பதோடு, பிரித்தானிய பிரதமர் நன்கு குணமடைந்து நாட்டு மக்களின் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையோடு மீண்டும் கொரோனா அறிவுறுத்தல்களை வழங்க வரவேண்டும் என வேண்டுகின்றோம்.

குறிப்பு - பிரித்தானியாவில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேர் கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்கானதுடன் 5 ஆயிரத்து 373 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.