பிரித்தானியாவில் 14 நாட்களில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பிக்கும்

Report Print Tamilini in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது.

இந் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

கடந்த ஏழு நாட்களில் சராசரியாக 700 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முந்தைய எண்ணிக்கையை ஒப்பிட்டால் 28 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து அமைச்சர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கு முன்பாக, அதாவது குளிர்காலத்திற்கு முன்பாகவே அது தாக்கலாம் என தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் நொட்டிங்காம் சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்து நாட்டவர்கள் பின்பற்றி வந்த பாதுகாப்பு நடைமுறைகளை விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

தற்செயலாகக்கூட கொரோனா பரவ அனுமதிக்கக்கூடாது என்று கூறிய அவர், விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தமுடியும் என்றார்.

எனினும் ஐரோப்பாவின் பிற பாகங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார் அவர்.

இதுவரையில் பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 692 ஆகும். இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 878. இதில் நேற்றைய தினம் 581 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த சில நாட்களை விட சற்று அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.