பிரித்தானியாவில் தேசிய ரீதியில் முடக்கமா? பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in பிரித்தானியா

கொரோனா தொற்றுக்கு எதிரான தேசிய முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான தனது நிலைப்பாட்டை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தனது அரசாங்கம் கடுமையாக உழைத்து, பொருளாதார மீட்சிக்கு நாட்டை சிறந்த நிலையில் வைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

டவுனிங் வீதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி, முழுமையான முடக்கம் என்பது சரியான முடிவு அல்லவென தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகளை சகித்துக்கொண்ட அனைவருக்கும், உங்கள் துணிச்சலுக்காகவும், உங்கள் பொறுமைக்காகவும், உங்கள் பொது உற்சாகத்துக்காகவும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டுப்பாடுகள் செயல்பட்டு வருவதாகவும், வைரஸ் மீள் உருவாக்கம் வேகமாக காணப்படுவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது பிரதமர் போரிஸ் ஜான்சனின் இலட்சியம் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு போராடி வரும் நிலையில், ஜோன்சன் அமைத்த புதிய மூன்று அடுக்கு கொரோனா எச்சரிக்கை அமைப்பு கடந்த வாரம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடுத்தர அளவு பகுதிகளில் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக அளவு பிரிவில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு உள்ளிட்டவற்றில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனிடையே, மிக அதிக அளவு பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளில் விருந்தினர்களை தங்க வைக்கவோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் 6 மாத காலத்துக்கு அமுலில் இருக்குமென்றும் 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் இதுவரை மொத்தம் 830,998 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 44,571 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.