பிரித்தானியாவில் சுயதனிமைப்படுத்தலுக்கான நாட்கள் குறைக்கப்படுகிறதா? வெளியாகியுள்ள தகவல்

Report Print Basu in பிரித்தானியா
437Shares

கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாட்களை குறைப்பது குறித்து பிரித்தானியா அரசாங்கம் ஆலோசித்து வருகிறதாக வடக்கு அயர்லாந்து செயலாளர் பிராண்டன் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

சுய தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களிலிருந்து குறைக்கப்படலாம் என்ற அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிராண்டன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இதுவரை பிரித்தானியாவில் 854,010 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 44,745 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பிரித்தானியா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சுயதனிமைப்படுத்தல் கால நாட்களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியாக முடிவெடுக்கப்படும் என்று பிராண்டன் கூறியுள்ளார்.

இது குறித்து இறுதி முடிவை அல்லது அறிவிப்பை எடுக்க நாங்கள் இன்னும் தயாராக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நகரத் தொழிலாளர்கள் மற்றும் நிறுவன முதலாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து விலக்க முடியும் என்ற அறிக்கையை பிராண்டன் லூயிஸ் மறுத்துள்ளார்.

அத்துடன், விதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது அனைவருக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.