க்ளாஸ்கோ உள்ளிட்ட 11 பகுதிகளில் நான்காம் நிலை கட்டுப்பாடுகள் அமுல்!

Report Print Murali Murali in பிரித்தானியா
74Shares

கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் ஸ்கொட்லாந்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதன்படி, க்ளாஸ்கோ உள்ளிட்ட 11 பகுதிகளில் நான்காம் நிலை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11ம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்கள், உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும். அதேநேரம் பயணத் தடையும் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய காரணங்கள் இன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பயணம் செய்வதற்கு ஒரு புதிய சட்டத் தடையும் அமுல்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வடக்கு அயர்லாந்தில் இரண்டு வார காலத்திற்கு கடுமையான முடக்கல் நடவடிக்கைகளை அமுல்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும். அத்துடன், விருந்தோம்பல் துறை மூடப்பட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் இறுதிக்குள் கூடுதல் கட்டுப்பாடுகள் அவசியம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் எச்சரித்ததை அடுத்து இந்த நடைமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.