பிரித்தானியாவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Report Print Murali Murali in பிரித்தானியா
746Shares

பிரித்தானியாவில் இன்றைய தினம் 1,631 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி, பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக 100,000 இறப்புகளை கடந்து ஐந்தாவது நாடு பிரித்தானியாவாகும்.

அண்மைய நாட்களில் பிரித்தானியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,

எனினும், நாளாந்த இறப்பு புள்ளிவிவரங்களைப் போலவே மருத்துவமனையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

மேலும், 20,089 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,689,746 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டவுனிங் வீதியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இவ்வாறு கூறியுள்ளார்,

“உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் நான் வருந்துகின்றேன், ஏனெனில் இந்த மோசமான புள்ளிவிபரத்தில் உள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் பிரதமராக இருக்கின்றபோது அரசாங்கம் செய்த எல்லாவற்றிற்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை இந்த நாளில் நான் மீண்டும் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

அன்பானவரை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அதிக இறப்பு எண்ணிக்கையைத் தணிக்க அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்தது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, “இன்று மிகவும் சோகமான நாள்” என்று விவரித்தார்.

துரதிர்ஷ்டவசமாக தடுப்பூசிகளின் விளைவுகள் உணரத் தொடங்குவதற்கு அடுத்த சில வாரங்களில் நாம் இன்னும் அதிகமான இறப்புகளைக் காணப்போகிறோம்.” என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.