விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய 7 ஆண்டு கால அடைக்கலத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார் என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அசாஞ்சேவை லண்டன் பொலிசார் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவைக் குறிப்பிட்டு எட்வர்ட் ஸ்னோடன், ''ஈக்வேடார் நாட்டு தூதரக அதிகாரிகள் தூதரகத்துக்குள் நுழைந்து விருது வென்ற ஒரு பத்திரிகையாளரை இழுத்துச் செல்ல லண்டனின் ரகசிய பொலிசாரை அழைத்துள்ளனர்.
WATCH: Moment Julian Assange is CARRIED out of the Ecuadorian Embassy in London. pic.twitter.com/OEeqmoksGr
— RT UK (@RTUKnews) April 11, 2019
அசாஞ்சேவை விமர்சிப்பவர்கள் வேண்டுமானால் இதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன்.
பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.