ட்ரம்ப் ஒரு முட்டாள்! திட்டித் தீர்த்த ஊடக அதிபர் முர்டோக்

Report Print Samy in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்1பி விசா விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணமாக செயல்படுவதாக கூறி அமெரிக்க ஊடக அதிபர் ராபர்ட் முர்டோக் திட்டித் தீர்த்த விவகாரம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார்.

அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க உதவும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அது வரை எச்1பி விசாவை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இதற்கு தடை விதித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்கும் முன்பாக, ட்ரம்ப் எச்1பி விசாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் உல்ப், அதிபர் ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள் கோபக்கனல்’ என்ற அந்த புத்தகத்தில் இதுபற்றி விரிவாக கூறியுள்ளார்.

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்பை சந்தித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு, ராபர்ட் மூர்டோக்கை, ட்ரம்ப் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஐடி துறையினரின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், ‘‘ஐடி துறையினருக்கு உண்மையிலேயே எனது உதவி தேவைப்படுகிறது, ஒபாமா இவர்களுக்கு உதவவில்லை. தேவைக்கு அதிகமான விதிமுறைகளை உருவாக்கி ஒபாமா இவர்களுக்கு கெடுபிடி தந்துள்ளார். இவர்களுக்கு உதவ வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது’’ எனக்கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முர்டோக், ‘‘கடந்த 8 ஆண்டுகளாக, ஒபாமாவை தங்கள் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, ஐடி துறையினர்தான், அரசு நிர்வாகத்தை நடத்தினர். அவர்களுக்கு உங்கள் தேவை இருக்காது’’ என கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ‘‘உண்மையிலயே எச்1பி விசா விஷயத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். ஐடித்துறையினருக்கு அதற்கான தேவை உள்ளது’’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த முர்டோக் ‘‘எச்1பி விசா விதிமுறைகளை தளர்த்தினால், வெளிநாட்டினர் அமெரிக்காவில் குவிந்து வருவது அதிகரிக்கும். இதனால், வெளிநாட்டினரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்ற பிரச்சாரம் சாத்தியமில்லாமல் போகும். முன்னுக்கு பின் பேசக்கூடாது’’ என கூறியுள்ளார்.

இதையடுத்து, ‘முன்னுக்கு பின் பேசும் முட்டாள்’’ என ட்ரம்ப்பை கூறி முர்டோக் தொடர்பை துண்டித்து விட்டார்.

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.