உடன்படிக்கையை கைச்சாத்திட கோத்தபாயவை எதிர்பார்க்கும் அமெரிக்கா?

Report Print Steephen Steephen in அமெரிக்கா

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உத்தேச மில்லினியம் அபிவிருத்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த உடன்படிக்கையை ஆராய்ந்து ஒரு வாரத்தில் அறிக்கையை வழங்குவதாக ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியுள்ளார் எனவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நேற்று காலை 8.30 அளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குறித்து உடன்படிக்கை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

உத்தேச உடன்படிக்கையை துரிதமாக கைச்சாத்திட வேண்டும் என சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி அதனை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் உடன்படிக்கை தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள மில்லினியம் அபிவிருத்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்க அரசாங்கம், இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க உள்ளது.

இலங்கை உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தல், காணி நிர்வாக பிரச்சினைகளை தீர்த்தலுக்காக வழங்கப்படும் இந்த நிதி தவணை முறையில் 5 ஆண்டுகளுக்குள் வழங்கி முடிக்கப்படும்.

இதனிடையே இலங்கையில் தீர்மானகரமான தேர்தல் நடக்கவிருக்கும் காலத்தில் அரசியல் ரீதியான சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் இப்படியான உடன்படிக்கையை கைச்சாத்திடுவது செயற்பாட்டு ரீதியானது அல்ல என அமெரிக்காவும் கருதுவதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்காலத்தில் புதிய மக்கள் ஆணையை பெறும் பௌத்த அரசியல் தலைவர் ஒருவரை தவிர இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் பலம் இல்லை என்பதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் தேவை சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வாளரான சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் குசல் பெரேரா, தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக அமெரிக்காவுக்கு சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது.

புதிதாக தெரிவாகும், இராணுவத்தின் ஒத்துழைப்பு இருக்கும் பிரபலமான சிங்கள பௌத்த தலைவரால் மட்டுமே அதனை செய்ய முடியும்.

2007ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச, ஐந்தாவது தரப்பாளராகவே எக்ஸா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

இதனால், இப்படியான ஒருவர் இலங்கையின் தலைவராக வருவது அமெரிக்காவின் தேவை என்பதுடன் எதிர்ப்பு இருக்காது எனக் கூறியுள்ளார்.