மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை இழந்துவிட்ட இலங்கை

Report Print Ajith Ajith in அமெரிக்கா

மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை இலங்கை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் முதல் இந்த நிதியை இலங்கைக்கு வழங்கும் வகையில் உடன்படிக்கையை செய்து கொள்ள அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

எனினும் அரசியல் காரணங்களுக்காகவும் இலங்கையின் இறைமையை காரணம் காட்டியும் இலங்கை இதற்கு பின்னடித்து வந்தது.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த உடன்படிக்கையை செய்து கொள்ள உடன்பட்ட போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உடன்படிக்கைக்கு இன்று வரை இணக்கம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பில் எம்.சி.சியின் நிறைவேற்று சபை கடந்த வாரம் கூடி ஆராய்ந்துள்ளது.

இதன்போது இலங்கை இந்த உடன்படிக்கையை செய்து கொள்வதில் தாமதம் காட்டிவருவது தொடர்பாக ஆராயப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பரில் எம்.சி.சியின் வருடாந்த கூட்டம் நடைபெறும் போது இந்த நிதியை வழங்கக்கூடிய ஒரு நாட்டை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த நிதியை இலங்கையால் பெற்றுக் கொள்ள முடியாது என்று எம்.சி.சியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார்.

நிதிக்கான கோரிக்கையை முன்வைத்த அரசாங்கமே அந்த நிதியை பெற்றுக் கொள்ள உடன்படிக்கை செய்து கொள்ளாமல் இருக்கும் செயலை தாம் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் டிசம்பருக்குள் இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜென்னர் எடெல்மன் குறிப்பிட்டுள்ளார்.