ஐஎஸ் - ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி அமெரிக்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் அமெரிக்க இராணுவம் ஐ.எஸ் - ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஒளிந்து இருக்கும் இடத்தை இலக்கு வைத்து முன்னெடுத்த தாக்குதலில் அபூபக்கர் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அபூபக்கர் அல் பக்தாதி தம் வசம் இருந்த தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து தன்னை தானே மாய்த்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் அபூபக்கர் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் தளத்தில், அவரது மரணம் தொடர்பில் "மிகப் பெரிய விடயம் ஒன்று நடந்தது!" என்று மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 5 வருடங்களாக மறைந்திருந்த தீவிரவாத குழுவின் தலைவர் அபூபக்கர், கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் ஐ.எஸ் - ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் போது அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்டிருந்த காணொளியில் தோன்றியிருந்தார். அதுவே 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் அபூபக்கர் ஊடகங்களுக்கு முன்னர் தோன்றிய முதற் சந்தர்ப்பமாகும்.
2018 பெப்ரவரியில் அமெரிக்க அரசாங்கம்,2017 மே மாதத்தில் அமெரிக்க படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அபூபக்கர் காயமடைந்திருப்பதாகவும், அதன் காரணமாக அத் தீவிரவாத அமைப்பு அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை 5 மாதங்களுக்கு கைவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
அதே சமயம் குறித்த தாக்குதலின் உயிரிழந்தவர் ஐ.எஸ் - ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி என்பது இதுவரை உறுதி செய்யபடவில்லை என அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் சீ.என்.என் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். எனவே உயிரிழந்தவரின் உடல் பாகங்களை மரபணுப்பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டளவில் ஐ.எஸ் - ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அபூபக்கர் அல் பக்தாதி, 2013 ஆண்டில் ஈராக்,சிரியாவை மையப்படுத்தியதான ஐ.எஸ் - ஐ.எஸ் அமைப்பு தொடர்பிலான அறிவிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019