அமெரிக்க படை தளம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

Report Print Murali Murali in அமெரிக்கா

ஈராக் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச வானொலி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க படை அதிகாரிகள், எப் 16 ரக விமான இயங்கு தளம் என்பன உள்ள முக்கிய தளமாக இந்த இராணுவ தளம் காணப்படுகின்றது.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் முகாமுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை.

எனினும், ஈரான் அனுசரணையில் ஈராக்கில் செயற்படும், ஆயுதக் குழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

அத்துடன் அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் தெரிவித்திருந்தது.

இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.