ட்ரம்ப் மீதான கண்டன தீர்மானம்! 21ம் திகதி விசாரணைகள் ஆரம்பம்

Report Print Murali Murali in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீது, செனட் சபையில் எதிர்வரும் 21ம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது.

இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள பிரதிநிதிகள் சபையில், இந்தத் தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், செனட் சபையில் இந்த தீர்மானம் குறித்து விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்தத் தீர்மானம், செனட் சபையில் நிறைவேறுவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் இருந்து இதுவரை அனுப்பப்படவில்லை. இது குறித்து, குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்,

“இந்த வாரத்துக்குள் இந்தத் தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து, எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து விசாரணை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கிறோம்.

முதலில் கண்டன தீர்மானம் குறித்த விவாதத்துக்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதன் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மொத்தம், 100 பேர் கொண்ட செனட் சபையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும்.

எங்களுடைய கட்சி பெரும்பான்மையுடன் இருப்பதால், இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை” என அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.