மக்கள் நேசித்த தளபதியின் மரணம்! அமெரிக்க ஜனாதிபதியின் பொய்கள் அம்பலம்

Report Print Sujitha Sri in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தமது அடாவடித்தனங்களை நியாயப்படுத்த கதைகளை இட்டுக்கட்டி கூறுவார். ஈரான் பிரச்சினையிலும் அப்படித்தான். ஈரானைப் பிடிக்காது என்பதால் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார் என கட்டுரையாளர் சதீஷ் கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும்,

இவற்றின் தொடர் விளைவுகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சத்தைத் தொட்டு ஒட்டுமொத்த உலகையும் பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.

பிரிகேடியர் காசிம் சுலைமானியின் படுகொலை அடாவடித்தனத்தின் உச்சம். அவரைக் கொன்றமையானது, ஈரானியர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரைக் கொன்றமைக்கு சமமானது என்று அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஈரானிய மக்கள் காசிம் சுலைமானியை எந்தளவிற்கு நேசித்தார்கள் என்பதற்கு அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் சாட்சி.

ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அவருக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்கு மிக்க தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சுலைமானி காணப்பட்டார்.

ஈரானின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு சற்று சிக்கலானது. பல கூறுகளை உள்ளடக்கியது. அதில் சகல தரப்புக்களினதும் அபிமானத்தை வென்றவராக காசிம் சுலைமானி திகழ்ந்தார்.

இதில் ஈரானிய புரட்சிகர காவல் படையணி என்பது முக்கியமான கூறாகும். இந்தப் படையணியின் பரா துருப்பு இராணுவ பிரிவாக அல் - குத்ஸ் படையணி திகழ்கிறது.

அல் - குத்ஸ் படையணியின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு முன்னதாக மேற்கு ஆசிய பிராந்தியத்தின் பூகோள அரசியலைப் பேச வேண்டும். இங்கு அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முட்டுக்கட்டையாகத் திழ்ந்தது ஈரானே.

சுன்னத்துல் ஜமாஅத் - ஷியா என்ற பிரிவுகளின் அடிப்படையில் இஸ்லாமியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈரானை சூழவுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முனைந்தது.

இந்தப் பிராந்தியத்தில் ஈரானுக்கு உற்ற நண்பனாகத் திகழ்ந்தவர், சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்அசாத். அவரை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கியெறிய சிரியாவையே சின்னாபின்னமாக்க அமெரிக்கா தயங்கவில்லை.

இது போலவே ஏனைய நாடுகளிலும் ஈரானுக்கு எதிரான சக்திகளுக்குத் தூபமிட்டு பிராந்தியத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. மத்திய கிழக்கு வரைபடத்தை ஆராய்ந்தால், லெபனான் முதற்கொண்டு யேமன் வரை பல நாடுகளில் நீடிக்கும் ஆயுதமோதல்களின் இரகசியம் இது தான்.

அமெரிக்கா தனது நாட்டைத் தனிமைப்படுத்தி இல்லாதொழிக்க முயற்சி செய்த போது, பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநாட்டுவதன் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தோற்கடிப்பது அல் - குத்ஸ் படையணியின் பிரான நோக்கமாக இருந்தது.

யேமன், லெபனான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஈரான் செல்வாக்கு செலுத்தி, அமெரிக்காவின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியதெனில் அதற்குக் காரணம் அல் - குத்ஸ் படையணியே.

ஐ.எஸ் இயக்கத்துடன் போரிட்டு ஈரானைப் பாதுகாப்பதில் அல் - குத்ஸ் படையணியின் தளபதி காசிம் சுலைமானி எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை ஈரானிய மக்கள் அறிவார்கள்.

சுலைமானி இருந்திருக்காவிட்டால் ஐ.எஸ் இயக்கம் ஒட்டுமொத்த ஈராக்கையே தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் என்பது திண்ணம். வெறுமனே போர் தந்திரோபாயங்களில் தேர்ச்சி பெற்ற ஒருவரால் மாத்திரம் இத்தகைய சாதனையை நிலைநாட்ட முடியாது.

அவர் அரசியல் அறிவோடு இராஜதந்திர நகர்வுகளில் சாணக்கியம் படைத்தவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத் தான் அமெரிக்கா கொன்றது. ஒரு வணிக விமானத்தில் பணித்து பக்தாத் விமானத்தில் தரையிறங்கி ஒரு வாகனத் தொடரணியில் சென்ற வரை ரிமோட் கொன்ட்ரோல் கருவி மூலம் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி ஏவுகணை மூலம் தாக்கிக் கொன்றது அமெரிக்கா.

ஒரு இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கான பயணத்தில் காசிம் சுலைமானியுடன், ஈராக்கின் பராதுருப்பு படைப்பிரிவின் தலைவர் அடங்கலாக பத்துப் பேர் கொல்லப்பட்டார்கள். இந்தப் படுகொலையை நியாயப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பொய் சொன்னார்.

சுலைமானியினால் அச்சுறுத்தல் இருக்கிறது என்பது அந்த பொய்யாகும். ஆண்டாண்டு காலமாக சுலைமானி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்களை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் டொனால்ட் டர்ம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

ஆனால் ஈரான் எந்தவொரு நாட்டையும் அத்துமீறி தாக்கியது கிடையாது. அதனைச் செய்தது அவரே. சுலைமானி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஈராக்கிய, சிரிய பொது எல்லைக்கு அருகில் அமெரிக்க விமானங்கள் பரா துருப்பு படைகளைச் சேர்ந்த 30 பேரைக் கொன்று குவித்தமை பிந்திய உதாரணம்.

அமெரிக்க அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ட்ரம்பின் அடாவடித்தனங்கள் போர்ப் பிரகடனத்திற்கு சமமானவை. மக்களவைக்கு அறிவிக்காமல் சுலைமானியைக் கொல்வதற்காக நடத்திய தாக்குதல் பற்றி அவர் 48 மணித்தியாலங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

இரகசிய ஆவணத்தின் மூலம் டொனால்ட் ட்ரம்ப் தமது தரப்பு நியாயப்படுத்தல்களை காங்கிரஸிற்கு அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென சபாநாயகர் நான்சி பெலோசி குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானுடன் மோதலில் ஈடுபடுவது தொடர்பிலான தீர்மானத்தை ஆராய்ந்தால் அந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நேரமும், விதமும், அது பற்றிய நியாயப்படுத்தலும் பாரதூரமான கேள்விகளை எழுப்புகின்றன” என்று நான்சி பெலோசி அம்மையார் கூறுகிறார்.

தமக்குப் பிடிக்காதவர்களுக்கு வில்லன் பட்டம் சூட்டி அவர்களை ஓரங்கட்டுதல் என்ற தந்திரத்தை அமெரிக்கத் தலைவர்கள் ஈரான் மீது தொடர்ந்து பிரயோகித்து வந்துள்ளனர். ஈரானை பயங்கரவாதத்தின் அச்சாணி என்று விபரித்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முதற்கொண்டு பல தலைவர்களைக் கூறலாம்.

அவரது நிர்வாகம் மாத்திரமன்றி பராக் ஒபாமாவின் நிர்வாகமும் சுலைமானியைக் கொல்வது பற்றி சிந்தித்த போதிலும் அவ்வாறு செய்யவில்லை. சுலைமானியின் இழப்பு எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இருவரும் அறிந்திருந்ததாலோ, நியாயமான காரணங்கள் இல்லாததாலோ அவ்வாறு செய்வதை தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனால் டொனாலட் ட்ரம்பிற்கு பின்விளைவுகள் பற்றியோ நியாயப்படுத்தல்களின் முக்கியத்துவம் பற்றியோ கவலையில்லை. ஈரான் விவகாரத்தில் அவர் எத்தனையோ பொய்களை சொல்லியிருக்கிறார். தமது செயல்களை நியாப்படுத்த முனைந்து மூக்குடைபட்டு நின்றிருக்கிறார்.

அதில் முக்கியமான பொய், ஈரானின் அணுசக்தித் திட்டம் பற்றியதாகும். இந்த அணுசக்தித் திட்டத்தின் மூலம் ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த அணுவாயுதங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் பாதிப்பு எனவும் ட்ரம்ப் பிரகடனம் செய்தார்.

இந்த குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையிலானதாகும். இதனை நிரூபிக்க எதுவித தர்க்க ரீதியான ஆதாரங்களும் கிடையாது.

இதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலையைத் தீர்ப்பதற்காக உலகின் பலம் பொருந்திய வல்லரசு நாடுகளுடன் உலகப் பொது அமைப்புகளும் இணைந்து ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை உருவாக்கின.

இதன் பிரகாரம் ஈரான் யூரேனிய செறிவூட்டலைக் குறைக்க வேண்டும். அதற்காக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் தளர்த்தும்.

இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை விலகச் செய்த சந்தர்ப்பத்திலும் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு கதைகளை சொன்னார். உடன்படிக்கையின் பங்காளிகளான பிரிட்டன், பிரான்ஸ் முதலான நாடுகளும் ட்ரம்பின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக அவரை வெளிப்படையாகவே கண்டித்திருந்தன. டொனால்ட் ட்ரம்ப் பொய்களைச் சொல்லி அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து விலகி ஈரான் மீது கூடுதல் பெருளாதார தடைகளை விதித்ததைத் தொடர்ந்து வளைகுடாவில் பிரச்சினை தீவிரம் பெற்றது.

உலகில் கூடுதலான எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஷ் நீரிணையில் கடற்கலங்கள் தாக்கப்பட்ட சமயம் அதற்கு ஈரானே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு இலக்கான சமயம் அதனையும் ஈரானே தாக்கியது என்று டொனாலட் ட்ரம்ப் குற்றம் சுமத்தினார்.

யேமனில் இயங்கும் ஆயுதப் போராட்டக்குழுவொன்ற தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தாலும் அதனைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. கடந்த மாதம் ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கா குண்டு போட்டதைத் தொடர்ந்து பக்தாத்திலுள்ள தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டார்கள்.

இது ஈரான் தூண்டு விட்ட ஆர்ப்பாட்டம் என்று டொனால்ட் ட்ரம்ப் இட்டுக்கட்டி கதை சொன்னாலும் இதனை ஆதாரபூர்வமாக அவரால் நிரூபிக்க முடியாமல் போனது. என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்பது தெளிவாகத் தெரியும்.

எனினும் அமெரிக்க நலன்களுக்குத் துணைபோகும் மேற்குலக ஊடகங்கள் உண்மையான சித்திரத்தை காண்பிக்காத காரணத்தால் உண்மையை அறிவது சற்றுக் கடினமான விடயமாக இருக்கிறது.

உண்மையில் தமது பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க ஆதிக்கத்தை இல்லாதொழித்து அமைதியான வலயமாக மாற்றும் முயற்சிகளில் அதீத அக்கறை கொண்ட திறமைசாலியாகத் திகழ்ந்த காசிம் சுலைமானியின் உண்மையான முகத்தை மேற்குலக ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.

அவர் பற்றிய செய்திகளுடன் சேர்க்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். அதேபோன்று ஈரானிய மக்கள் சுலைமானி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார்கள் என்பதை மேலைத்தேய ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.

அவரது ஜனாஸா நல்லடக்கத்தின் போது சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தியை மேலைத்தேய ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்திருந்தன. ட்ரம்ப் தயக்கமின்றி பொய் சொன்னாரென்றால் அவருக்கு சார்பான மேலைத்தேய ஊடகங்கள் உண்மைகளை மறைத்து அவரது நோக்கங்களை நிறைவேற்றத் துணை போயிருக்கின்றன.

இந்தப் பொய்களுக்குள் சுலைமானியைக் கொன்றதற்கான நோக்கங்களை மறைத்து விடலாம் என்று ட்ரம்ப் எண்ணக்கூடும்.

தமது நாடாளுமன்றத்தில் தமது எதிராக விசாரிக்கப்படும் அரசியல் குற்றவியல் பிரேரணையில் இருந்து தற்காலிகமாக கவனத்தை திசைதிருப்பி நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் களமிறங்கத் தேவையான அரசியல் பின்புலத்தை உருவாக்குவது அவரது நோக்கம் என்பது தெளிவான விடயம்.

சுலைமானியின் படுகொலையைத் தொடர்ந்து ஈராக்கிலுள்ள இரு படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பின்னர் அவர் பதற்றப்படவில்லை. அமெரிக்கா ஆகக்கூடுதலான படைவலுவைக் கொண்டிருந்தாலும் அதனை இப்போது பிரயோகிக்கத் தேவையில்லையெனக் கூறி ஈரானுடன் நேரடி யுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியத்தில் இருந்து தற்போதைக்கு பின்வாங்கியுள்ளார் என்று கூறலாம்.

ஈரான் என்பது ஈராக்கோ, சிரியாவோ, யேமனோ அல்ல. ஈரானிய மக்கள் தமது மண்ணையும், கலாச்சாரத்தையும் அபரிமிதமாக நேசிக்கும் சுயகௌரவமும், தன்மானமும் மிக்க மக்கள் என்தை அவர் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

எதுவித நியாயமான காரணங்களும் இன்றி அல் - குத்ஸ் படையணியை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து அதன் தலைவரைக் கொன்று குவித்த அமெரிக்க ஜனாதிபதியை ஈரானிய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இருந்த போதிலும் அமெரிக்க ஜனாதிபதியைப் போல் தமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் உலகப் பொது ஒழுங்கிற்கும் மனித குலத்தின் தார்மீக விழுமியங்களுக்கும் முரணாக ஈரானிய மக்கள் செயற்பட்டதும் இல்லை. செயற்படப்போவதும் இல்லை என்பதை மேற்குலக ஊடகங்கள் கட்டவிழ்த்து விடுதம் பொய்களைத் தாண்டி புரிந்து கொள்வது அவசியம்.