அமெரிக்காவின் முடக்க நிலை நீக்கப்பட வேண்டும்! டொனால்ட் ட்ரம்ப்

Report Print Ajith Ajith in அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்தை விமர்சித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயத்தையும் நேற்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் ஆரம்பிக்க, தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 50 மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முடக்க நிலையை நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆயத்தங்களை ஆளுநர்கள் அல்ல. அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கடந்த திங்கட்கிழமையன்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முடக்க நிலையை நீக்கும் பணிகளை மாநில ஆளுநர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

இதனை மத்திய அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் ஆளுநர்களின் பொறுப்புக்கூறல் இந்த விடயத்தில் அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த கருத்துரைத்துள்ள நியூயோர்க் ஆளுநர் அன்றூ கியுமோ, ஜனாதிபதி ட்ரம்ப் சண்டைக்காக கொதித்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

'நாங்கள் மன்னரை கொண்டிருக்கவில்லை', 'எங்களிடம் ஜனாதிபதியே இருக்கிறார்' என்று அவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாநில ஆளுநர்களும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது வர்த்தக நிலையங்களை திறந்தால் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸினால் 19 லட்சத்து 48 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 ஆயிரத்து 334 பேர் மரணமாகியுள்ளனர்.

இதில் அமெரிக்காவில் 24 ஆயிரத்து 432 பேரும், ஸ்பெய்னில் 18 ஆயிரத்து 56 பேரும், இத்தாலியில் 21 ஆயிரத்து 67 பேரும் பிரான்ஸில் 14 ஆயிரத்து 967 பேரும் உள்ளடங்குகின்றனர். 467 ஆயிரத்து 179 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.