சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாண அரசாங்கம் வழக்கு தாக்கல்

Report Print Ajith Ajith in அமெரிக்கா

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாண அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கையாண்ட விதம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்று காரணமாக பாரிய பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாகாண அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சீன அரசாங்கம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிறிய முயற்சியை மாத்திரமே மேற்கொண்டது என்று மிஸ்ஸோரியின் சட்டமா அதிபர் எரிக் ஸ்க்மிட் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் இந்த இயலாமை காரணமாக மிஸ்ஸோரி மாகாணத்தில் பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் நட்டமேற்பட்டுள்ளது என்று அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சட்டவல்லுநர்கள் அமெரிக்காவின் மாகாணம் ஒன்று எவ்வாறு சீனாவின் மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்பதை இதன் பின்புலம் தொடர்பிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அமரிக்க நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு எவ்வாறு தாக்கத்தை செலுத்த முடியும் என்றும் சட்டவல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்து தொடர்பில் சீன அரசாங்கம் உலகுக்கு உண்மைகளை மறைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சிறிய முயற்சியையே மேற்கொண்டது.

எனவே இந்த குற்றத்துக்காக அவர்கள் பொறுப்புக்கூறவேண்டும் என்று மிஸ்ஸோரியின் சட்டமா அதிபர் தமது மனுவில் கோரியுள்ளார்.

குறித்த சிவில் மனு நேற்று சீன அரசாங்கம், சீனாவின் கம்யூனிஸக்கட்சி, சீனாவின் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.