கொரோனாவும் அமெரிக்காவும் - பராக் ஒபாமாவின் விமர்சனம்

Report Print Tamilini in அமெரிக்கா

உலகையே திணற வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவிலேயே அதிகளவில் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உறுதியற்ற அணுகுமுறையால் தான் அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது ஆட்சியின்போது பணிபுரிந்த ஊழியர்களுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பணியில் இருந்த சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கலந்துரையாடியபோது கொரோனா வைரஸ் பிரச்சினையை ஜனாதிபதி டிரம்ப் அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஒபாமா தெரிவிக்கையில்:

கொரோனா வைரஸ் பரவலின்போது ஜனாதிபதி டிரம்பின் மோசமான பதிலானது உலகளாவிய நெருக்கடியின்போது வலுவான அரசு ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கிய நினைவூட்டாக இருந்தது.

கொரோனா நோய்க்கு எதிரான ஜனாதிபதி டிரம்பின் அணுகுமுறை உறுதியற்றதாயிருந்தது.

பெப்ரவரியில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த தகவலை அவர் நிராகரித்தார். அது காணாமல் போய்விடும் என்றார்.

பின்னர் மார்ச் மாத நடுவில் நோயின் தீவிரத்தை அவரே ஒப்புக்கொண்டார். கொரோனா உயிரிழப்புக்கள் முற்றிலும் குழப்பம் நிறைந்த அரசின் நிர்வாகத்தால் ஏற்பட்ட பேரழிவாகும்.

சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கு மற்றும் மற்றவர்களை எதிரியாக பார்க்கும் போக்கை எதிர்த்து நாம் போராடுகிறோம். இது மக்களிடையே ஒரு வலுவான தூண்டுதலாக மாறியுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீதான வழக்கை நீதித்துறை கைவிட்டுவிட்டது என்பது சட்டத்தின் ஆட்சி குறித்த அடிப்படை புரிதல் ஆபத்தில் உள்ளதை காட்டுகின்றது.

நீ்ங்கள் அனைவரும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீண்டும் அதிபராக வருவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நான் இனி அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடெனை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொள்வேன் என்றார்.