அமெரிக்காவில் இந்தளவு உயிரிழப்புக்கள் ஏற்பட காரணம்! சுகாதாரத்துறையின் முன்னாள் அதிகாரி

Report Print Ajith Ajith in அமெரிக்கா

கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையே அமெரிக்காவில் இந்தளவு உயிரிழப்புக்கள் ஏற்பட காரணம் என அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரிக் பிரைட் என்ற இந்த அதிகாரியின் தலைமையிலேயே கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அவர் கடந்த மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிவித்த சிகிச்சை முறை குறித்து கேள்வி எழுப்பியமைக்காகவே தாம் பதவி நீக்கப்பட்டதாக ரிக் பிரைட் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரியில் நாட்டில் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியமைக்கு தாம் பொறுப்பல்ல என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கர்கள் தமது பொறுப்புக்களில் முன்னேற்றம் அடையாது போனால் இன்னும் பாரிய அழிவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க சென்ட் புலனாய்வுக்குழுவின் தலைவரான ரிச்சட் பர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.

கொரோனா வைரஸ் இழப்புக்களை தடுக்க உரிய தகவல்களை தரவில்லை என்பதே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.