இலங்கை பிரஜைகள் மூவர் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

Report Print Sujitha Sri in அமெரிக்கா
150Shares

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு பொருள் உதவி வழங்குவதற்கு சதி செய்தமை உள்ளிட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மூன்று இலங்கை பிரஜைகள் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

'இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ்' என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் குழுவொன்றின் அங்கமாக, இந்தப் பிரதிவாதிகள் இருந்துள்ளனர் என அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரஜைகள் ஐவர் உட்பட, 268 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு, இந்தக் குழு பொறுப்பாகும்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர், இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், இலங்கை சட்ட அமுலாக்கத் துறையினருக்கு, அமெரிக்கா விசாரணை உதவிகளை வழங்கியது என்றும் இந்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் உதவி வருகிறது. வழக்கை நெறிப்படுத்தும் இலங்கை வழக்குத் தொடுநர்களுக்கு, அமெரிக்க நீதித் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை வழங்கி வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.