இலங்கை அரசிற்கு நெருக்கடியைக் கொடுக்குமா? அமெரிக்க ஜனாதிபதியின் புதிய நியமனம் சமந்தா

Report Print Banu in அமெரிக்கா
1612Shares

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதராக பணியாற்றிய சமந்தா பவர், சர்வதேச அபிவிருத்திகான அமெரிக்க இயக்கத்தின் நிர்வாகியாக, புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அபிவிருத்திகான அமெரிக்க இயக்கத்தின் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இருப்பதற்கும் சமந்தாவிற்கு அதிகாரம் வழங்குவதாகவும் பைடன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

"சமந்தா பவர் என்பது மனசாட்சி மற்றும் தார்மீக தெளிவின் உலக புகழ்பெற்ற குரல் - அனைத்து மக்களின் கெளரவத்திற்கும் மனித நேயத்திற்கும் துணை நிற்க சர்வதேச சமூகத்தை அழைத்து நிற்கிறோம் என்று பைடன் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமந்தா கொண்டுவரும் கொள்கை ரீதியான அமெரிக்கா ஈடுபாட்டிற்கான ஈடு இணையற்ற அறிவும் அயராத அர்ப்பணிப்பும் எனக்குத் தெரியும், உலக அரங்கில் ஒரு தலைவராக நம் நாடு தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதால் அவரது நிபுணத்துவமும் முன்னோக்கும் அவசியம்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

50 வயதான பவர், ஒபாமா நிர்வாகத்தில் 2013 முதல் 2017 வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றினார்.

2009 முதல் 2013 வரை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊழியர்களில் ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளராகவும், பலதரப்பு விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2017 தொடக்கம் 2019 இறுதி வரை எந்த ஒரு பதவியும் வகிக்காத சமந்தா பவர் இலங்கை விடயத்தில் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார், இவரின் தற்போதைய இன் நியமனமானது இலங்கை அரசுக்கு சவால் மிக்க ஒன்றாகவே இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா பவரிற்கு தற்போது வழங்கப் பட்டுள்ள பதிவி என்பது சர்வதேச ரீதியில் மிக முக்கியமான பதவியாக பார்க்கப் படுகிறது.

சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு நெருக்கடிகள் அதிகளவில் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதுடன் இந்திய அரசையும் மிக ஆளுமையாக கையாளும் தகுதியுடையவர் சமந்தா பவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் இலங்கை சென்ற இறுதிச் சந்திர்ப்பம் என்பதுடன் மங்கள சமரவீரவின் மிக நட்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதிகாரத்தில் இல்லாத போது சமந்தா பவர் கடந்த காலத்தில் இலங்கை விடயத்தில் தலையிட்ட சந்தர்ப்பங்கள் கீழ் உள்ளன.........

2016ம் ஆண்டு யாழ் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா பவர்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், சிறிலங்காவுக்கான தனது பயணம் குறித்தும் சிறிலங்காவில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

பெருமளவில் காணாமற்போதல்களால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளான சிறிலங்காவுக்கும், மெக்சிகோவுக்கும் தாம் அண்மைய மாதங்களில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததாக சமந்தா பவர் குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரை சந்தித்தபோது, 2009 மார்ச் மாதம் 16 வயதுடைய தனது மகள் இராணுவ சீருடையணிந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டது எவ்வாறு என்று விபரித்திருந்தார்.

அவர் தடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டார். அதற்குப் பின்னர் அவரது மகள் திரும்பி வரவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஒவ்வொரு நாளையும் அவர் தனது மகளைத் தேடுவதிலேயே செலவிட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு, அவர்களின் உறவுகள் காணாமற்போனது தொடர்பான சான்றிதழை வழங்க வழி செய்யும் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதாகவும் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டும் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போது கடும் எதிர்ப்பினை வெளியிட்டவர்

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

அதில், எதேச்சாதிகாரியான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நிலை நிறுத்தும் முயற்சியாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ம் ஆண்டில் இலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

இலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

அதில், தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் ஜனாதிபதியை முன் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

இலங்கையில் உள்ள நிறுவனங்கள் வளைகின்றன. ஆனால் உடையவில்லை. அனைத்துலக அழுத்தங்களை அதிகரிக்க வேண்டியது முக்கியம் என்று முன்னர் கூறியுள்ளார்.

2018இல் மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி?- சமந்தா பவர் கூறும் காரணம்

இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக 2018ம் ஆண்டு, தகவல் வெளியானதை அடுத்தே, அவர், இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், இது நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர், “இது இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார்.

“இதிலிருந்து சிறிசேன செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிளவுகள் ஆழமாக முன்னர் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கி நகர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கீச்சகப் பதிவுகளில் சமந்தா பவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.