மேல் மாகாணத்தில் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தஞ்சம்! 63 பேர் மரணம்; 53 பேர் மாயம்

Report Print Rakesh in காலநிலை

வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஏனைய விவரங்கள் வருமாறு,

இந்த அனர்த்தங்களால் 63 பேர் மரணமடைந்துள்ளதுடன், 73 பேர் காயமடைந்துள்ளனர். 53 பேர் காணாமல்போயுள்ளனர். 44,231 குடும்பங்களைச் சேர்ந்த 1,72,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 322 வீடுகள் முற்றாகவும், 1,077 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

களுத்துறை மாவட்டமே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் 59 பேர் மரணமடைந்துள்ளதுடன், 53 பேர் காணாமல்போயுள்ளனர். 36,036 குடும்பங்களைச் சேர்ந்த 1,38,320 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 4,439 குடும்பங்களைச் சேர்ந்த 17,597 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,756 குடும்பங்களைச் சேர்ந்த 16,133 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.