ஆபத்தான கட்டத்தில் யாழ். குடாநாடு!

Report Print Vethu Vethu in காலநிலை

வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 24 மணித்தியாளங்களுக்கு யாழ் குடாநாட்டில் தொடர்ந்து அடைமழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற நேரிடும் என நேற்று மாலை யாழ்ப்பாண மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு தேவையான பாதுகாப்பு பிரிவுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிக மழை மேலும் தொடர்ந்தால், மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கான இடம் தொடர்பில் கடற்படை மற்றும் விமான படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், மானிப்பாய் வீதியில் மரம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் யாழின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்படும் மக்கள் இடம்பெயர்ந்தால் அவர்களை பாதுகாப்பதற்கான இடம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு, பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை அதிகாரிகளுக்கு நாகலிங்கம் வேதநாயகம் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வடபகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.