வலுவடையும் தாழமுக்கம்? வடக்கு, கிழக்கு அதிகாரிகளுக்கிடையில் அவசர கூட்டம்

Report Print Sujitha Sri in காலநிலை
வலுவடையும் தாழமுக்கம்? வடக்கு, கிழக்கு அதிகாரிகளுக்கிடையில் அவசர கூட்டம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க தாழ்வு நிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பில் வடக்கு, கிழக்கின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மட்டத்திலான அவசர கூட்டமானது தற்சமயம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக இந்த கூட்டம் நடைபெறுவதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த தாழமுக்க நிலை தமிழ் நாட்டை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டது.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கக்கடலில் தற்போது 1100 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான முன்னாயத்த மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சூறாவளி போன்ற அனர்த்தங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துமாயின் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள், படங்கள் - மோகன்