வலுவடையும் தாழமுக்கம்! யாழில் விசேட நடவடிக்கை

Report Print Murali Murali in காலநிலை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது சூறாவளி அல்லது வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம்கொடுக்க முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்பு தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மீனவர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் பணித்துள்ளார்.

அத்துடன், உலர் உணவு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, ஆகிய சகல துறை சார்ந்த அதிகாரிகளையும் எந்த நேரமும் விழிப்பாக இருக்குமாறும் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் இன்றைய கலந்துரையாடலின் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.