மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி: விவசாயிகள் பாதிப்பு

Report Print Ashik in காலநிலை

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாய செய்கைக்கு நீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் நடப்பு வருடத்திற்கான காலபோக விவசாய நெற்செய்கையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி விவசாயிகள் கட்டுக்கரைக்குளத்தை நம்பி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மழை பெய்யாத நிலையிலும், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக கட்டுக்கரை குளத்தில் நீர் வற்றிய நிலையில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர் இன்மையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குளங்களில் நீர் வற்றிய நிலை காணப்படுகின்றது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

விவசாயத்திற்காக விவசாய காணிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்க்கிணறுகளில் கூட நீர் வரத்து குறைந்து காணப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிகளவான விவசாயிகளின் பயிர்கள் கதிர் விட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நீர் இல்லாமை பயிர்களை அழிவடையச் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தமது பாதிப்பு குறித்து விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் யாரும் வந்து பிரச்சினைகள் குறித்து உரிய முடிவுகளை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நகையினை ஈடு வைத்தும், தமது கால்நடைகளை விற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது கால் நடைகளுக்கும் குடி நீர் இல்லை. விவசாயச் செய்கைக்கும் நீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மன்னார் மாவட்ட விவசாயிகள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாய செய்கைக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.